செப்பனியா புத்தகம்

செப்பனியா புத்தகம் எழுத்தாளர்: செப்பனியா 1:1, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம் என்று இந்த புத்தகத்தின் எழுத்தாளரை தீர்க்கதரிசியாகிய செப்பனியா என்று அடையாளப்படுத்துகிறது. செப்பனியா என்ற பெயரின் அர்த்தம் “தேவனால் பாதுகாக்கப்பட்டவன்” என்பதாகும். எழுதப்பட்ட காலம்: செப்பனியா புத்தகம் கி.மு. 735 முதல் கி.மு. 725 வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். எழுதப்பட்டதன் நோக்கம்: செப்பனியாவின் நியாயத்தீர்ப்பு மற்றும் ஊக்கமளித்தல் பற்றிய செய்தி…

செப்பனியா புத்தகம்

எழுத்தாளர்: செப்பனியா 1:1, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம் என்று இந்த புத்தகத்தின் எழுத்தாளரை தீர்க்கதரிசியாகிய செப்பனியா என்று அடையாளப்படுத்துகிறது. செப்பனியா என்ற பெயரின் அர்த்தம் “தேவனால் பாதுகாக்கப்பட்டவன்” என்பதாகும்.

எழுதப்பட்ட காலம்: செப்பனியா புத்தகம் கி.மு. 735 முதல் கி.மு. 725 வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: செப்பனியாவின் நியாயத்தீர்ப்பு மற்றும் ஊக்கமளித்தல் பற்றிய செய்தி மூன்று முக்கிய கோட்பாடுகளைக் கொண்டுள்ளது: 1) தேவன் எல்லா தேசங்களுக்கும் தேவனாக இருக்கிறார். 2) துன்மார்க்கர் தண்டிக்கப்படுவார்கள், நீதிமான்கள் நியாயத்தீர்ப்பு நாளில் நிரூபிக்கப்படுவார்கள். 3) மனந்திரும்பி, தன்னை நம்புகிறவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்.

திறவுகோல் வசனங்கள்: செப்பனியா 1:18, “கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.”

செப்பனியா 2:3, “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”

செப்பனியா 3:17, “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (மகிழ்வுடன் பாடுவார்).”

சுருக்கமான திரட்டு: பூமி முழுவதிலும், யூதாவிலும், சுற்றியுள்ள நாடுகளிலும், எருசலேமிலும், எல்லா நாடுகளிலும் மேலும் வரும் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை செப்பனியா உச்சரிக்கிறார். இதைத் தொடர்ந்து எல்லா தேசங்களுக்கும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் பிரகடனங்களும், குறிப்பாக யூதாவிலுள்ள எஞ்சியவர்களாகிய உண்மையுள்ள அவருடைய ஜனங்களுக்கு அருளப்போவதையும் விவரிக்கிறது.

கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பதை அறிந்ததால், அப்படியே உள்ளதை உள்ளபடியாக அப்பட்டமாக பேச செபனியாவுக்கு தைரியம் இருந்தது. அவரது புத்தகம் “கர்த்தருடைய வார்த்தை” என்று தொடங்கி “கர்த்தர் கூறுகிறார்” என்று முடிகிறது. ஜனங்கள் வணங்கிய பல தெய்வங்களோ அல்லது அசீரிய இராணுவத்தின் வலிமையோ கூட அவர்களைக் காப்பாற்ற முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். தேவன் கிருபையும் இரக்கமும் உடையவர், ஆனால் அவருடைய எச்சரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்படும்போது, நியாயத்தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாள் வேதவசனங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகள் அதை “கர்த்தருடைய நாள்” என்று அழைத்தனர். எருசலேமின் வீழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்வுகளை அவர்கள் தேவனுடைய நாளின் வெளிப்பாடுகள் என்று குறிப்பிட்டனர், அவை ஒவ்வொன்றும் கர்த்தருடைய இறுதி நாளை சுட்டிக்காட்டின.

முன்னிழல்கள்: 14-20 வரையிலுள்ள வசனங்களில் சீயோனின் இறுதி ஆசீர்வாதம் உச்சரிக்கப்படுகிறது. பெரும்பாலும் நிறைவேறாதவை, இவை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நிறைவுசெய்யக் காத்திருக்கும் மேசியாவைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. கர்த்தர் தம்முடைய ஜனங்களின் பாவங்களுக்காக மரிக்க வந்த கிறிஸ்துவின் மூலம்தான் நம்முடைய தண்டனையை நீக்கிவிட்டார் (செப்பனியா 3:15; யோவான் 3:16) என்கிறது. ஆனால் இஸ்ரவேல் தனது உண்மையான இரட்சகரை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இது இன்னும் நடக்கப்போகிறதாக இருக்கிறது (ரோமர் 11:25-27).

இஸ்ரவேலுக்கு சமாதானமும் பாதுகாப்பும் பற்றிய வாக்குறுதி, அவர்களுடைய ராஜா அவர்கள் மத்தியில் இருக்கும் காலம், கிறிஸ்து உலகத்தை நியாயந்தீர்க்கவும், அதை தனக்காக மீட்டுக்கொள்ளவும் திரும்பும்போது. அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் பரலோகத்திற்கு ஏறியதைப் போலவே, அவர் திரும்பி வந்து பூமியில் ஒரு புதிய எருசலேமை அமைப்பார் (வெளி. 21). அந்த நேரத்தில், இஸ்ரேலுக்கான தேவனுடைய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும்.

நடைமுறை பயன்பாடு: பெயர்கள் மற்றும் சூழ்நிலைகளில் சில மாற்றங்களுடன், கி.மு. 7 ஆம் நூற்றாண்டின் தீர்க்கதரிசியாகிய இவர் இன்று நம்முடைய பிரசங்க மேடைகளில் நின்று, துன்மார்க்கருக்கு வரும் நியாயத்தீர்ப்பின் அதே செய்தியையும், உண்மையுள்ளவர்களுக்கு நம்பிக்கையையும் அளிக்க முடியும். கடவுள் தம்முடைய மக்களின் தார்மீக மற்றும் மத பாவங்களால் புண்படுத்தப்படுகிறார் என்பதை செப்பனியா நமக்கு நினைவூட்டுகிறார். தேவனுடைய மக்கள் வேண்டுமென்றே பாவம் செய்யும்போது தண்டனையிலிருந்து தப்ப மாட்டார்கள். தண்டனை வேதனையாக இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் தண்டனைக்கு மாறாக மீட்பாக இருக்கலாம். தீமை தடையற்றது மற்றும் வெற்றி பெற்றது என்று தோன்றும் ஒரு காலத்தில் துன்மார்க்கத்தின் தண்டனையின் தவிர்க்க முடியாத தன்மையானது ஆறுதலளிக்கிறது. தேவனுக்குக் கீழ்ப்படிமல் இருப்பதற்கான சுதந்திரம் நமக்கு இருக்கிறது, ஆனால் அந்த கீழ்ப்படியாமையின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சுதந்திரம் நமக்கு இல்லை. தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம், ஆனால் அவர் அவர்களை மறக்கவில்லை.

[English]



[முகப்பு பக்கம்]

செப்பனியா புத்தகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.